சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண், முதியவர் பலி


சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண், முதியவர் பலி
x
தினத்தந்தி 4 Dec 2018 9:47 PM GMT (Updated: 4 Dec 2018 9:47 PM GMT)

சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண், முதியவர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ஏராளமானவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் அங்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் குகை சிவனார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி ரத்தினமாலா(வயது 39). கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் ரத்தினமாலா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பன்றிக்காய்ச்சல் தனி வார்டில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அதிகாலை அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினமாலா பரிதாபமாக இறந்தார். மேலும் வார்டில் உள்ள 18 பேருக்கு தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் அன்னதானப்பட்டி சீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகனார்(83). கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகனார் இறந்தார். சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story