மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:45 PM GMT (Updated: 4 Dec 2018 9:54 PM GMT)

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

நாகர்கோவில்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக மாநில அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படுவது போன்றே மாநில அரசு டாக்டர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அதாவது புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இதே போல் குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் மட்டுமே நேற்று சிகிச்சை அளித்தனர்.

இந்த போராட்டம் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை நடந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் கடந்த சில வாரங்களாகவே காய்ச்சல் பாதிப்பால் தினமும் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி செல்கின்றனர். இப்படி இருக்க டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். ஆனால் அதே சமயத்தில் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்டவை வழக்கம் போல் நடந்தன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க குமரி கிளை தலைவர் பிரின்ஸ் பயசிடம் கேட்டபோது கூறியதாவது:-

எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. எனவே தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் டாக்டர்கள் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 175 டாக்டர்கள் பணிகளை புறக்கணித்தனர்.

இனியும் எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில் வருகிற 8-ந் தேதி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை புறக்கணிக்கும் போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு 12-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story