மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்


மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:45 AM IST (Updated: 5 Dec 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகி டாக்டர். ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் கைலாஷ், கோபி, ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது டாக்டர்கள் பேசியதாவது:-

தமிழக அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் எங்கள் அடிப்படை கோரிக்கையான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழக அளவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சுமார் ஓராண்டாக நோயாளிகளை பாதிக்காத வண்ணம் பல வகை போராட்டம் நடத்தி வந்தோம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை நிறுத்தி வைத்தோம். எனினும் அரசு எங்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்திய காரணத்தினால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். எனவே, பொதுமக்கள் எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயம் உணர்ந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் 75 டாக்டர்கள் பங்கேற்றனர். இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 350 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.



Next Story