மேகதாதுவில் அணை கட்டுவதை முழுமையாக எதிர்க்கிறோம் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


மேகதாதுவில் அணை கட்டுவதை முழுமையாக எதிர்க்கிறோம் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2018 11:45 PM GMT (Updated: 4 Dec 2018 10:07 PM GMT)

மேகதாதுவில் அணை திட்ட ஆய்வுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், ஆனால் அணை கட்டுவதை முழுமையாக எதிர்ப்பதாகவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

போடிபட்டி,

திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். பின்னர் அவர், உடுமலையை சேர்ந்த தொழிலதிபரும், பா.ஜனதா கட்சியின் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மறைந்த யு.கே.பி.என்.கந்தசாமியின் வீட்டிற்கு சென்று அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுரையில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவ மனை அமையும். தமிழகத்திற்கு கடந்த முறை பிரதமர் மோடி வந்தபோது கருப்பு கொடி காட்டிய நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் தரக்கூடிய ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக பிரதமர் மோடி வந்தபோதுதான் கருப்பு கொடி காட்டப்பட்டது. எந்த நேரத்தில் எது செய்ய வேண்டும் என்று தெரியாமல் கல்யாண வீட்டில் கதறி அழுவது போன்ற நிகழ்வு அது. தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தவர், தந்து கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. வெறும் அரசியலுக்காக அவரை விமர்சனம் செய்யக்கூடாது.

கடந்த காலங்களில் ஈழத்தில் 1½ லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு யார் காரணம் என்பதை வைகோ மறந்து இருக்கலாம். ஆனால் அவரால் உணர்வூட்டப்பட்ட தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தெருத்தெருவாக தமிழ் சமூகத்திற்கு தி.மு.க.வும், காங்கிரசும் செய்துவரும் துரோகத்தை பற்றி பேசினேன். வைகோவும் பேசியிருக்கிறார். என்னை பாராட்டி பேசி இருக்கிறார். மேலும் பிரதமராக வாய்பாய் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு யாருமே செய்ய முடியாத அளவுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என்று பாராட்டியவர் வைகோ.

அப்பர் அமராவதி திட்டம் உள்பட தமிழகத்திற்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற பாடுபடுவேன். மேகதாதுவில் அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அது குறித்த ஆய்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதை முழுமையாக எதிர்க்கிறோம். அணை கட்டுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறுஅவர் கூறினார்.


Next Story