மானாமதுரையில் 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்கள் இடிப்பு; இட உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்


மானாமதுரையில் 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்கள் இடிப்பு; இட உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:45 AM IST (Updated: 5 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் 4 வழிச்சாலை அமைக்க அந்த பகுதியில் உள்ள கட்டிங்கள் இடிக்கப்பட்டன. அப்போது இடங்களின் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மானாமதுரை,

மதுரையில் இருந்து பரமக்குடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.937 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதற்காக மானாமதுரை புது பஸ் நிலையம் எதிரே சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி கோர்ட்டு உத்தரவுப்படி தொடங்கியுள்ளது. சர்வீஸ் ரோடு அமைய உள்ள இடங்களில் உள்ள வணிக வளாகங்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்தநிலையில் வணிக வளாக கட்டிட உரிமையாளர்கள் இதுகுறித்து கூறும்போது, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டோம். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. மேலும் கட்டிடங்களில் உள்ள பொருட்களை எடுக்க குறிப்பிட்ட நேரமாவது தாருங்கள் என்று கேட்டோம், அதற்கு அதிகாரிகள் பதில் கூறாமல் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கீழே தூக்கி எறிகின்றனர். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களது கட்டிடம் இடிக்கப்படும் என்று எங்களுக்கு முன்கூட்டி தகவலோ, கடிதமோ எதுவும் தரப்படவில்லை என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, கோர்ட்டு உத்தரவுபடி தான் முறையாக இடித்து வருகிறோம். ஏற்கனவே கோர்ட்டு நியமித்த கமி‌ஷன் அதிகாரிகள், இந்த இடத்திற்கு வந்து முறையாக அளவிட்டு, அவர்கள் கோர்ட்டில் அறிக்கை கொடுத்தனர். அதன் பிறகு நீதிமன்றம் அளித்த உத்தரவுபடி நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம் என்றனர். மேலும் இடிக்கப்படும் பகுதியில் உள்ளவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்தும் உள்ளோம். எங்களுக்கு சர்வீஸ் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து இடத்தின் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, கோர்ட்டு உத்தரவின்படி பணிகள் நடைபெறுவதாக கூறி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கட்டிடங்கள் இடிப்பு பணி தொடர்ந்து நடந்தது.


Next Story