ராமர் கோவில் பிரச்சினையில் கலவரம் ஏற்படுத்த மத்திய அரசு சதி ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு
ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்திருப்பதாக ராஜ்தாக்கரே குற்றம்சாட்டினார்.
மும்பை,
ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்திருப்பதாக ராஜ்தாக்கரே குற்றம்சாட்டினார்.
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
போனில் தகவல்
எனக்கு டெல்லியில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக போனில் பேசியவர் என்னிடம் தெரிவித்தார். மஜ்லிஸ் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி துணையுடன் இந்த வன்முறையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இதை நான் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதுகிறேன்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 4½ ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது அவர்களுக்கு மதகலவரத்தை தூண்டுவதை தவிர வேறு வழியில்லை.
தேர்தலுக்கு பிறகு கட்டலாம்
ராமர்கோவில் கட்ட நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு கோவில் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. எதிர்ப்பு
ராஜ்தாக்கரேயின் இந்த பேச்சுக்கு மஜ்லிஸ் கட்சியின் மும்பையை சேர்ந்த வாரிஸ் பதான் எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “ராஜ்தாக்கரே சரிந்துபோன தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அசாதுதீன் ஒவைசியின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார். முக்கியமான தகவல் ஏதேனும் கிடைத்து இருந்தால், அதை அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அதை தவிர்த்து பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை போலீசார் உடனடியாக தங்கள் வசப்படுத்தி விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story