மதுரைக்கு மாற்றக்கோரி மேலூர் சிறையில் கைதிகள் ரகளை டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
மேலூர் சிறையில் உள்ள கைதிகள் தங்களை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நேரில் விசாரணை நடத்தினார்.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கிளை சிறைச்சாலை உள்ளது. இது தற்போது 18 வயது முதல் 20 வயதுடைய கைதிகள் அடைக்கப்படும் சிறையாக உள்ளது. மதுரையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகள் 13 பேர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை சிறையில் இருந்து மேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களையும் சேர்த்து மேலூர் சிறையில் தற்போது 50–க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இந்தநிலையில் மதுரை சிறையில் இருந்து வந்த கைதிகள், தங்களை மீண்டும் மதுரைக்கு கொண்டு செல்லுமாறு சிறைக்காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சுகன்பாண்டி, நந்தகோபால், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் திடீரென்று ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட கைதிகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் கோர்ட்டு நீதிபதி சுரேஷ் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மதுரை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி, சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோரும் கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.
ரகளையின்போது காயமடைந்த கைதிகளுக்கு சிறைக்குள் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் சிறைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கடந்த 2015–ம் ஆண்டு இதேபோன்று கைதிகளிடையே கோஷ்டி மோதல் நடைபெற்றது. அப்போது சிறைத்துறை போலீஸ் அதிகாரியின் மண்டை உடைந்ததும், கைதிகள் பலர் காயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.