உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை: உறவினர்கள் மறியல்
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமம், இந்திரா காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(வயது 21). இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், தேனி மாவட்டம் பெரியகுளம் துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கண்ணம்மா என்ற சாரதா(19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சாரதா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாரதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்துபட்டி போலீசார் சாரதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சாரதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தரும்படி கேட்டனர். அப்போது சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து முதல் தகவல் அறிக்கை வந்தால்தான் உடற்கூறு செய்து கொடுக்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மறுநாள் தான் உடலை பிரேத பரிசோதனை செய்யமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென்று உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவவித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலைமறியலால் உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.