என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திட்டக்குடி,
கடலூர் மாவட்ட ஏ.ஐ. டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு திட்டக்குடியில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் மணிமாறன், பொருளாளர் நிலவழகன், சின்னத்தம்பி, ராமச்சந்திரன், மாட்டுவண்டி சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கியின் முன்னாள் மாநில செயலாளர் வேணுகோபால் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில பொது செயலாளர் காந்தி, மாநில தலைவர் அழகிரி, மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பழங்குடி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, அமைப்புசாரா சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் ராஜன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தை முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும், மாட்டு வண்டிகளுக்காக இயங்கும் மணல் குவாரியை நிரந்தரம் செய்ய வேண்டும், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், திட்டக்குடி பகுதியில் உள்ள வெலிங்டன் ஏரியை தூர்வாரி அணையை பலப்படுத்த வேண்டும், நிரந்தரமாக கான்கிரீட் கரை அமைத்து கொள்ளளவை உயர்த்துவதுடன் அனைத்து துணை ஏரிகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வரவேற்பு குழு தலைவர் முருகையன், செயலாளர் நிதிஉலகநாதன், பொருளாளர் நாராயணசாமி, மாட்டுவண்டி சங்க தலைவர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாட்டுவண்டி சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story