கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. மாதிரி மருத்துவமனை; அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. மாதிரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) சார்பில் புதுவை கோரிமேட்டில் மருத்துவமனையும், 12 இடங்களில் மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன. கோரிமேடு மருத்துவமனையின் தரம் உயர்த்துவது, மருந்தகங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக இ.எஸ்.ஐ. மண்டல குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரவடிவேலு, துணை இயக்குனர் பத்மஜா, இ.எஸ்.ஐ. மண்டல இயக்குனர் தாசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மேம்படுத்த புதுவை அரசு வழங்குவதாக அறிவித்த 5½ ஏக்கர் நிலத்தை பெற நடவடிக்கை எடுப்பது, அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி மருத்துவமனை அமைப்பது, அரியாங்குப்பத்தில் தனிநபர் அளித்த 1 ஏக்கர் நிலத்தில் புதிய மருத்துவமனை கட்டுவது, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது, புதுவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.