மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை வழங்க மறுப்பதா? அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்


மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை வழங்க மறுப்பதா? அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 5 Dec 2018 5:45 AM IST (Updated: 5 Dec 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை புதுவை அரசு வழங்க மறுப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநிலத்தில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசானது ஆட்சி அமைந்ததில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உரிமையை வழங்க மறுப்பதோடு, நடைமுறையில் உள்ள பென்‌ஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைக்கூட அவர்களுக்கு வழங்கமறுத்து மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

வருவாய்த்துறை, மின்துறை, பிப்டிக், விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.750 கோடிக்கும் மேல் நீண்டநாள் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு சலுகை செய்யும் புதுச்சேரி அரசானது, மத்திய அரசின் நிதியுதவியில் புதுவையில் தொழில் தொடங்க கடன்பெற்ற மாற்றுத்திறனாளிகள் வாங்கியுள்ள சுமார் ரூ.10 கோடி நிலுவையில் உள்ள பாக்கித்தொகைக்காக அவர்களுக்கு பல்வேறு துன்பங்களை செய்கிறது. அவர்களின் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்ற பட்ஜெட்டின் அறிவிப்பைகூட அரசு செயல்படுத்தவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்திர உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ள 1000–க்கும் மேற்பட்ட தகுதியான மாற்று திறனாளிகளுக்கு பென்‌ஷன் வழங்கப்படவில்லை. மரணமடையும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் புதிய பயனாளிகளை சேர்ப்பது நியாயமற்ற செயலாகும். ஆட்சி அமைந்து 30 மாதமாகியும் அவர்களுக்கு வழங்கவேண்டிய இலவச அரிசிகூட 5 முறைதான் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் 2 முறைதான் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படும் என்ற அரசின் பட்ஜெட் அறிவிப்பும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 4 சதவீத இடஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியான பணியில்கூட நிரப்ப அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அறிவிக்கப்படும் திட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாத பலகீனமாக ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை கொண்டாடும் உரிமையை இழந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலனையும், அவர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் பெற்றுத்தர வேண்டிய ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தை மூடிமறைக்க விழா நடத்துவதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளது. புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசானது இதற்கு மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் செய்யாமல் அவர்களுடைய நலன்காக்க அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story