முதுமலை வனப்பகுதிக்கு: சாலைகளை கடந்து செல்லும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


முதுமலை வனப்பகுதிக்கு: சாலைகளை கடந்து செல்லும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதிக்கு இடம்பெயரும் காட்டுயானைகள் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

மசினகுடி,

தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு-முண்டந்துறை ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சிறந்த புலிகள் காப்பகமாக முதுமலை இருந்து வருகிறது. தற்போது இந்த காப்பக வனப்பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட புலிகள் வாழ்ந்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலவே, காட்டுயானைகளின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு வனத்துறை மூலமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளும், மேம்பாட்டு பணிகளுமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் மற்ற வனப்பகுதிகளில் இருந்து முதுமலைக்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

பொதுவாக காட்டுயானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இடம் பெயர்ந்து செல்லும். எனவே சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து முதுமலைக்கு இடம்பெயரும் காட்டுயானைகள் சில நாட்களுக்கு பிறகு, அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. மேலும் முதுமலைக்கு இடம் பெயர்ந்து வரும் காட்டுயானைகள் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக அருகில் உள்ள சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று விடுகின்றன. கோடை காலம் முடிந்து நல்ல மழை பெய்து முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பசுமை திரும்பியவுடன், மீண்டும் முதுமலைக்கு வந்துவிடுகின்றன. இதனை ஒவ்வொரு ஆண்டும் காட்டுயானைகள் கடைபிடித்து வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும் காட்டுயானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியாக உள்ள தெங்குமராடா, சீகூர், மசினகுடி வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதி பச்சை பசேல் என காட்சி அளிக்கின்றது. புற்கள், செடி, கொடிகள் நன்றாக வளர்ந்து காட்டுயானைகளுக்கு தேவையான பசுந்தீவனம் அதிகளவில் உள்ளது. எனவே அவற்றை விரும்பி தின்பதற்காக தற்போது காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.

இதனால் சீகூர், மசினகுடி வனப்பகுதிகளில் வனத்துறையினர் விழிப்புடன் ரோந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சில காட்டுயானை கூட்டங்கள் சாலையோரங்களுக்கு வருவதாலும், சாலையை கடந்து செல்வதாலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் சாலையோரங்களுக்கு வரும் காட்டுயானைகள் சில நேரங்களில் வாகனங்கள் செல்ல விடாமல் வழி மறித்து நிற்கும் சம்பவங்களையும் காண முடிகிறது. சில காட்டுயானை கூட்டங்கள் குட்டிகளுடன் இருப்பதால் வாகனங்களையும், ரோந்து செல்லும் வனத்துறையினரையும் பார்த்தவுடன் துரத்தவும் செய்கின்றன.

இதனால் வனத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது. இதனிடையே மசினகுடியில் இருந்து தனியார் ஜீப்கள் மூலம் இயற்கை எழிலை காண சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டுயானை கூட்டங்களை கண்டு மகிழ்கின்றனர்.

Next Story