கஜா புயலால் பறவைகளை இழந்து தவிக்கும் அலையாத்தி காடுகள்


கஜா புயலால் பறவைகளை இழந்து தவிக்கும் அலையாத்தி காடுகள்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலினால் ஆயிரக்கணக்கான பறவைகளை இழந்து அலையாத்தி காடுகள் தவித்து வருகிறது.

முத்துப்பேட்டை,

உலகளாவிய இயற்கை சுற்றுலாத்தலங்களில் சுனாமியின் சீற்றத்தை சமாளித்த அலையாத்தி காடுகள் குறிப்பிடத்தக்கதாகும். அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் அலையாத்தி எனும் மாங்குரோவ் காடுகள் இயற்கையாகவே மண்டி வளரும் தன்மையுள்ளதாகும்.

அலையாத்தியில் உவர் நிலங்களில் வளரும் தன்மை கொண்ட சுமார் 60 வகையான மரங்கள் உள்ளன. இதில் 12 வகையான அரிதான மரங்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதி காடுகளில் உள்ளன.

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் 73 வகையான மீன்கள், 6 வகையான இறால்கள் உற்பத்தியாகின்றன. மேலும் இந்த காடுகளை குறிவைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரியவகை பறவைகள் இங்கு வருகின்றன. உலகில் சைபீரியா, ரஷியா, ஐரோப்பா, இலங்கை, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பறவையினங்கள் சுதந்திரமாக இங்கு வந்து செல்கின்றன.

உலக புவியியல் பகுதியின் முக்கிய ஈரப்குதியான இங்கு அதிகமான நீர்ப்பறவைகளும் வசிக்கின்றன. ஆகஸ்டு மாதத்தில் வரும் பறவைகள் பிப்ரவரி மாதம் வரை இங்கு தங்குகின்றன. இதனால் அலையாத்தி காடுகள் இந்த கால கட்டத்தில் பறவைகள் சரணாலயம் போல காட்சி அளிக்கிறது.

சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை இந்த அலையாத்தி காடுகள் பெருமளவில் தடுத்தன. இந்த நிலையில் கடந்த மாதம்(நவம்பர்) ஏற்பட்ட கஜா புயலால் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையாக சேதம் ஏற்பட்டது. இந்த புயல் அலையாத்தி காடுகளையும் விட்டு வைக்கவில்லை.

கஜா புயல் தாக்கத்தினால் அலையாத்திக்காட்டை ஒட்டியுள்ள ஜாம்புவானோடை, தொண்டியக்காடு, முனாங்காடு, செங்காங்காடு, தில்லைவிளாகம் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து கிடந்தன. இறந்து கிடந்த பறவைகளை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் புதைத்தனர். மேலும் இங்குள்ள மரங்களும் புயலால் சாய்ந்து சேதமடைந்தன. தற்போது அலையாத்தி காட்டில் போதிய அளவு பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இங்குள்ள பார்வையாளர் கோபுரம், தங்கும் கூடாரம், நடைபாதை ஆகியவையும் புயலால் சேதமடைந்து விட்டது. சுனாமியை வென்ற அலையாத்தி காடுகள் கஜா புயலின் ருத்ர தாண்டவத்தால் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆதலால் இனிவரும் காலங்களில் புதிய மரங்களை வளர்த்து, அலையாத்தி காடுகளை தொடர்ந்து பாதுகாக்க அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Next Story