கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:01 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்திலேயே இரவு தங்கினார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரவு நேர முழு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சசிகுமார், வட்ட பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் குமரவேல், துணை செயலாளர் சேகர், லோகநாதன், மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் திருமால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

அப்போது திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணை மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனிசிறப்பு ஊதியம் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காலம் முழுவதும் ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவினை மாற்றி அமைக்க வேண்டும், பங்கீட்டு ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவியை தொழில்நுட்ப அலுவலர் பதவியாக அறிவிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு என மாற்ற வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சாமியனா பந்தல் அமைத்து இரவு தங்கி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story