பாலியல் வன்முறைகளை தடுக்கவே போக்சோ சட்டம்; துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
பாலியல் வன்முறைகளை தடுக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது என்று ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையில் போக்சோ சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளை தடுக்கவே மத்திய அரசு போக்சோ சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் புகார் செய்தால் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமுறை செய்த தவறு மீண்டும் செய்யாமல் இருக்கவே அரசு இது போன்ற சட்டங்களை கொண்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி மாணவிகள் ஆட்டோ அல்லது பஸ்சில் பயணிக்கும் போது யாரவது சீண்டினால் அல்லது குறும்பு செய்தால் 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது. இதை மீறி ஓட்டி விபத்தில் சிக்கினால் மாணவிகளின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அதை விட்டு விட்டு காதல் போன்றவற்றில் ஈடுபட்டால் வாழ்க்கை சீரழியும் வாய்ப்பு உள்ளது. மேலும் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். செல்போனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.