பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கோரி படஅதிபர் மதன் வழக்கு
தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது தொடர்பாக படஅதிபர் மதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
எஸ்.ஆர்.எம். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பெரும் தொகையை வாங்கி மோசடி செய்தவர் மதன். இவர், வேந்தர் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட மதன், பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
காலவாதியான எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி கடந்த நவம்பர் மாதம் 27–ந்தேதி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தேன். அதில், என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும், என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலிக்காமல், அப்படியே வைத்துள்ளனர். எனவே, என் மனுவை பரிசீலிக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் வி.சண்முகசுந்தர், ‘மனுதாரர் பல மாணவர்களிடம் மோசடி செய்தவர், இந்த வழக்கில் கூட போலீஸ் கமிஷனரை எதிர்மனுதாரராக சேர்க்காமல், உள்துறை செயலாளரையும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியையும் மட்டும் சேர்த்துள்ளார். இவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கக்கூடாது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story