திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்


திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆனுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஆகியன பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி தலைமையில் ஊர்வலமாக தர்காவுக்கு புறப்பட்டது.

கொடியேற்றம்

11.45 மணிக்கு கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தது. பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி யானையில் இருந்தவாறு பள்ளிவாசல் முன்பு கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து தர்காவில் சந்தனம் மெழுகுதல் நடந்தது.

பின்னர் தர்காவில் பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு பூ அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல் நடந்தது. இரவில் இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நேர்ச்சை வினியோகம்

விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் நன்றி நவிலல், சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியன நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story