கொடைரோடு அருகே பரபரப்பு: பெட்டிக்கடையில் விற்ற மதுவை குடித்த 2 தொழிலாளர்கள் பலி - போலியானதா? அதிகாரிகள் தீவிர விசாரணை


கொடைரோடு அருகே பரபரப்பு: பெட்டிக்கடையில் விற்ற மதுவை குடித்த 2 தொழிலாளர்கள் பலி - போலியானதா? அதிகாரிகள் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 10:54 PM GMT)

கொடைரோடு அருகே பெட்டிக்கடையில் விற்ற மதுவை வாங்கி குடித்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மதுபானம் போலியானதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைரோடு, 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). பாரதிபுரம் விநாயகர் நகரை சேர்ந்த சமையன் என்ற சாய்ராம் (60), முருகத்தூரான்பட்டியை அடுத்த பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி (47). இவர்கள் 3 பேரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் 3 பேரும் பள்ளப்பட்டியில் கவுண்டன்பட்டி பிரிவு அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். பின்னர் பள்ளப்பட்டி சாலையில் நடந்து வந்தபோது அவர்கள் 3 பேரும் திடீரென்று மயங்கி விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது, அவர்கள் 3 பேரும் மது குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அறிந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சமையன் இறந்தார். தங்கப்பாண்டியை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபானம் குடித்து 2 பேர் இறந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கவுண்டன்பட்டி பிரிவில் மது விற்கப்பட்ட பெட்டிக்கடையை பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

அதாவது, பள்ளப்பட்டி சிப்காட் அருகில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (35) என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்த மதுபான கடையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கவுண்டன்பட்டி பிரிவு என்னுமிடத்தில் உள்ள பெட்டிக்கடையில் ஆவாரம்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவர் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். அந்த மதுபானத்தை தான் முருகன், சமையன், தங்கப்பாண்டி ஆகியோர் வாங்கி குடித்து உள்ளனர் என்பது தெரியவந்தது.

பள்ளப்பட்டி சிப்காட் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபானங்களையும், பெட்டிக்கடையில் செல்வம் விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களையும் கைப்பற்றி மதுரையில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர். இதையடுத்து பார் நடத்தி வரும் ஜெயச்சந்திரன், மற்றும் பெட்டிக்கடையில் மது விற்ற செல்வம் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட மதுபானம் போலியானதா? அல்லது வேறு ஏதாவது ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story