புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும்


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:30 PM GMT (Updated: 5 Dec 2018 7:27 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்,

கஜா புயல் சீரமைப்பு பணிகள் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார். கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் சார்பில் சீரமைப்பு பணிகளும், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில், நாகை மாவட்டம் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப அந்த மக்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும். மீன்வளத்துறையில் இருந்து பாதிக்கப்பட்ட படகுகளுக்கு முடிந்த அளவு அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர், ஊரக வளர்ச்சி துறையினர், புதுவாழ்வு திட்டம் ஆகியோருடன் இணைந்து, தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) தமிமுன் அன்சாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story