நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தும் ‘ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை’ சென்னை குடிநீர் வாரியம் தகவல்


நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தும் ‘ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை’ சென்னை குடிநீர் வாரியம் தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 7:29 PM GMT)

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தும், ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் உதவுகிறது. இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூண்டி ஏரியில் பெறப்படும் தண்ணீரை இந்த ஏரிகளில் நிரப்பி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதேபோன்று சோழவரம் ஏரியும் வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

வடகிழக்கு பருவ மழையால் ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு தண்ணீர் ஏரிகளில் நிரம்பவில்லை. 

கோடைக்கு மாற்று ஏற்பாடு

குறிப்பாக 4 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 1,704 மில்லியன் கன அடி (1.7 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 252 மில்லியன் கன அடி (5.2 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு இருந்தது. வடகிழக்கு பருவ மழையை முழுமையாக நம்பி இருந்த அதிகாரிகள் தற்போது கோடைக்கு தேவையான தண்ணீரை பெற மாற்று ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகள், நெய்வேலி சுரங்கம் மற்றும் போரூர் அருகில் உள்ள கல்குவாரிகள், சென்னையில் உள்ள நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துவதற்காக பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story