புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் வைகோ தாக்கு


புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் வைகோ தாக்கு
x
தினத்தந்தி 6 Dec 2018 5:15 AM IST (Updated: 6 Dec 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என வைகோ கூறினார்.

சாத்தூர்,

சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 280 வாக்குசாவடி முகவர்களை நியமனம் செய்தது சாத்தூரில் தான். இது ஒரு முன்னுதாரணமான கூட்டம். இனிவரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். 20 தொகுதிகளில் யாரை நிறுத்தவேண்டும் என்று தி.மு.க. தான் முடிவு செய்யும்.

நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். பிரதமர் மோடி எனக்கு நண்பர். ஆனால் அது வேறு. தமிழகத்தில் கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நான் 29ஆண்டுகளுக்கு மேலாகவே பக்கபலமாக இருந்துள்ளேன். கருணாநிதி மரண படுக்கையில் இருந்தபோது சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையை வைகோ வழங்கினார்.

கூட்டத்தில் மாநில இலக்கியஅணி பொருளாளர் கண்ணன், மாநில மருத்துவ அணி செயலாளர் ரகுராம், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், தலைமை கழக பேச்சாளர் கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் நகர தலைவர் தமிழ்செல்வன், நகர பொறுப்பாளர் செல்வம், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story