அரசு பஸ்களின் குறைகள் குறித்து பயணிகள் புகார் அளிக்கலாம்: வாட்ஸ்-அப் எண் அறிமுகம்


அரசு பஸ்களின் குறைகள் குறித்து பயணிகள் புகார் அளிக்கலாம்: வாட்ஸ்-அப் எண் அறிமுகம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களின் குறைகள் குறித்து பயணிகள் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 பிரிவுகள் உள்ளன. இந்த 4 பிரிவுகளில் மொத்தம் 45 பஸ் டெப்போக்கள் அமைந்து உள்ளன.

இந்த டெப்போக்களில் 3,000 பஸ்கள் ஓடுகின்றன. கோவையில் மட்டும் 722 டவுன் பஸ்களும், 353 வெளியூர் செல்லும் பஸ்களும் என மொத்தம் 1,075 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அவ்வப்போது பழுதடைந்து பாதியில் நிற்பதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர். இதுதவிர அதிகளவு கரும்புகை வெளியேறுதல், மழைநீர் ஒழுகுதல்,இடையில் திடீர் கோளாறால் நின்று விடுவது போன்ற பிரச்சினைகளை மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.அத்துடன் பஸ்சுக்குள் கிழிந்த இருக்கைகள்,உடைந்த கம்பிகள்,குப்பை,துர்நாற்றம் என்று பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை கோட்டத்துக்கு தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 73 புதிய பஸ்கள் வழங்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இந்த பஸ்களும் முறையான பராமரிப்பு இன்றி உள்ளன. கோவை கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கும் வகையில் புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை கோட்டத்தின் கீழ் தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். அரசு பஸ்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை பயணிகள் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பயணிகள் 94425 01920 என்ற எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் அரசு பஸ்சில் உள்ள பிரச்சினைகளை தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை மேற்கண்ட எண்ணிற்கு அனுப்பலாம்.

இதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story