சிறப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே பாம்பன் தூக்குபாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும்; ரெயில்வே அதிகாரி தகவல்
சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பாம்பன் தூக்குபாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின் தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. காலையில் ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.
ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார். சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து என்ஜின் மட்டும் 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர். அதன் பின்னர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரெயில் பெட்டிகளும் மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக மானாமதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:– பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.
ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். புதிய பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. மண்டபம் வரை ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில்களில் வரும் பயணிகள் இறங்கி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பஸ்களில் சென்றுவருகின்றனர். ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் வரை மண்டபத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.