மணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


மணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:30 AM IST (Updated: 6 Dec 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

மணல் ஆலையை படம் பிடித்த பிரான்ஸ் வாலிபர்களை கைது செய்ய வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரிய மணல் ஆலைக்குள் அனுமதியின்றி சென்று படம் எடுத்த பிரான்ஸ் நாட்டு வாலிபர்களை கைது செய்ய வேண்டும். பிரான்ஸ் நாட்டு வாலிபர்களின் பின்னணியில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, தர்மலிங்க உடையார், தேவ் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் பா.ஜனதா நிர்வாகிகள் 2 உருவ பொம்மைகளை எடுத்து வந்து அதை கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள். அந்த 2 உருவ பொம்மைகளிலும், பிரான்ஸ் நாட்டு வாலிபர்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக பா.ஜனதாவினர் கூறும் நபர்களின் பெயர் எழுதப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உருவ பொம்மைகள் எரிக்கப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story