புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் நிவாரண பொருட்களை வழங்கினார்


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் நிவாரண பொருட்களை வழங்கினார்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 9:25 PM GMT)

கறம்பக்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

கறம்பக்குடி,

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கறம்பக்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருதன்கோன்விடுதி நால்ரோட்டில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், பெண்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பெண்கள் உதயநிதி ஸ்டாலினிடம் அரசின் நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை எனவும், வீடுகளை இழந்து வெட்ட வெளியில் தங்கி சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் மக்களின் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். காட்டாத்தி, ஊரணிபுரம், மூவர்ரோடு, கல்லாக்கோட்டை ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ரகுபதி, எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன், மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். புதுக்கோட்டையில் ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்துவிட்டு சென்ற போது உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களும், தி.மு.க.வினரும், வந்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் கீழே இறங்கி வந்தவுடன் ரசிகர்களும், தி.மு.க.வினரும் முண்டியடித்து கொண்டு அவரிடம் போட்டோ எடுப்பதற்காக சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் பாதுகாவலர்கள் கூட்டத்தில் இருந்து மீட்டு அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் திலகர் திடலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Next Story