திருப்பூர் ரெயில் நிலையத்தில் பின்னலாடை சரக்குகளை பாதுகாப்பாக வைக்க வசதி செய்ய வேண்டும் - சத்தியபாமா எம்.பி.யிடம் ரைசிங் சங்கம் கோரிக்கை


திருப்பூர் ரெயில் நிலையத்தில் பின்னலாடை சரக்குகளை பாதுகாப்பாக வைக்க வசதி செய்ய வேண்டும் - சத்தியபாமா எம்.பி.யிடம் ரைசிங் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 4:00 AM IST (Updated: 6 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ரெயில் நிலையத்தில் பின்னலாடை சரக்குகளை பாதுகாப்பாக வைக்க வசதி செய்து தரவேண்டும் என்று சத்தியபாமா எம்.பி.யிடம் ரைசிங் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்,

சத்தியபாமா எம்.பிக்கு, திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை தொழில் மூலம் ஏராளமானவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. உள்நாட்டு வர்த்தகத்திலும் ரூ.10 ஆயிரம் கோடியை கடந்து பனியன் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த தொழில்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பின்னலாடை ஏற்றுமதி உயர ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏற்றுமதி உயர வேண்டுமானால் சாய ஆலைகளின் தரமும், எண்ணிக்கையும், நவீன வசதிகளும் அதிகரிக்க வேண்டும். திருப்பூரில் தற்போதுள்ள சாய ஆலைகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் போது, அந்த கழிவுநீரை வெளியேற்றுவதில் சுற்றுச்சூழல் பிரச்சினை இல்லாதவாறு நவீன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஜப்பான், ரஷியா நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கழிவுநீரை கடலில் கொண்டு சேர்க்க உதவ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கெயில் திட்டம் மூலம் எரிவாயு வசதியை தொழில்நிறுவனங்களுக்கும் மானிய விலையில் வழங்க வேண்டும். திருப்பூரில் குண்டும்-குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிகளை செய்ய வேண்டும். திருப்பூர் ரெயில் நிலையத்தில் பின்னலாடை சரக்குகளை வைக்க பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூரில் மருத்துவ கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதிசெய்து கொடுக்க வேண்டும். மேலும், இந்த தொழிலாளர்களின் வசதிக்காக பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பூர் முழு சுகாதாரம் அடைவதற்கான திட்டங்களை செய்ய வேண்டும்.

ஆறு, குளங்களை சுத்தப்படுத்துவது, கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது, பள்ளிகளுக்கும், கிராமப்பகுதிகளுக்கும் சுகாதார வளாகம் அமைப்பது என்பது போன்றவற்றில் எம்.பி. நிதியை பயன்படுத்தி குப்பைகள் இல்லாத திருப்பூர் நகரம் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திருப்பூரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தொலைநோக்கு பார்வையுடன் உதவிட வேண்டும். 10 சதவீத தொகை முதலீடு செய்தால், குறைந்த காலத்திலேயே 100 சதவீத லாபத்தை வரியாகவும், அன்னிய செலாவணியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுபோல் திருப்பூர் உள்ள தொழில் அமைப்பினர் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இலக்கை நிர்ணயித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மூலம் இந்த கோரிக்கைகளை முன்வைத்து இயங்க வேண்டும். இவ்வாறு இயங்கினால் தொழில் நலம், தொழிலாளர் நலம், தொழில்துறையினரின் நலம் மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story