கடலூர் மாவட்டத்தில்: 58 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் - அதிகாரி தகவல்


கடலூர் மாவட்டத்தில்: 58 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:15 PM GMT (Updated: 5 Dec 2018 10:06 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 44,500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல்லுக்கு 58 ஆயிரத்து 288 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 98 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா நெல்லுக்கான பயிர்காப்பீடு கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்படி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல்லுக்கு வங்கி கடன் வாங்கியவர்கள், கடன் வாங்காதவர்கள் என மொத்தம் 58 ஆயிரத்து 288 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதில் ஏக்கருக்கு ரூ.2,565 தவணை தொகையில் ரூ.405-ஐ மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும்.

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தவணை தொகையாக ரூ.28 கோடியே 54 லட்சம் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் பங்களிப்பு தொகை ரூ.4 கோடியே 50 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு 42 ஆயிரத்து 350 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல்லுக்கு 40 ஆயிரத்து 756 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-17-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டு தொகை ரூ.132 கோடி வந்தது. இதில் நெற் பயிருக்கு மட்டும் ரூ.122 கோடி இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஜன்தன் வங்கி கணக்கு, வங்கி கணக்கு எண்ணில் பிழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2,600 விவசாயிகளுக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 210 சிறிய ஏரிகளில் 50 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story