பென்னாகரம் அருகே அடுத்தடுத்த 12 வீடுகளில் பணம், பாத்திரங்கள் திருட்டு கிராம மக்கள் பீதி
பென்னாகரம் அருகே அடுத்தடுத்த 12 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம், பாத்திரங்களை திருடிச்சென்றனர். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 4-ந்தேதி இரவு இந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), துரை(40), பொய்யாமொழி, நகேந்திரன், முனியப்பன், தங்கராஜ், பிரபு, செல்வம், பாக்கியராஜ் உள்ளிட்ட 12 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து ஊர்பொதுக்கள் சார்பில் பென்னாகரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சம்பவத்தன்று கருப்பையனஅள்ளி கிராமத்தில் அடுத்தடுத்த 12 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம், பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
கடந்த 2 வாரமாக பென்னாகரம், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
மேலும் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் கிராமமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story