மசினகுடி ஆற்றுப்பாலத்தில்: தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்


மசினகுடி ஆற்றுப்பாலத்தில்: தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 6:15 PM GMT)

மசினகுடி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மசினகுடி,-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மசினகுடி-மாவனல்லா-கல்லட்டி நெடுஞ்சாலையும் ஒன்று. கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு இந்த சாலை வழியாக தான் வந்து, செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்கள் கடந்து செல்ல மசினகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறு பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இன்றி காணபட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சில நேரங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி விடுகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சென்ற கார் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து, நீரில் மூழ்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குமாறு மசினகுடி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது மசினகுடி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கபட்டு உள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு மசினகுடி பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர்.

Next Story