கும்பகோணத்தில், வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: கைதான 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு


கும்பகோணத்தில், வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: கைதான 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:15 PM GMT (Updated: 6 Dec 2018 7:09 PM GMT)

கும்பகோணத்தில், வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதனையொட்டி அந்த பெண் தனது பணி தொடர்பான பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்தார்.

பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் இரவு கும்பகோணம் வந்த அவர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் வந்து உள்ளார். அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் அங்கு இருந்த ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து தான் செல்ல வேண்டிய முகவரியை காண்பித்து அங்கு தன்னை கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்த ஆட்டோ டிரைவர், அந்த பெண் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சல் போடவே ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரிடம் தன்னை தான் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபரும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் நோக்கத்துடன் அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 3 பேரை அங்கு வரவழைத்து உள்ளார். அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த வசந்த்(வயது 21), தினேஷ்(24), புருஷோத்தமன்(19), அன்பரசன்(19) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து வசந்த் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு(366) இளம்பெண்ணை கடத்தல், (376) பாலியல் பலாத்காரம், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் அவர்கள் 4 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் தினேஷ் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாங்கள் கைது செய்ய சென்றபோது அவர்கள் எங்களிடம் இருந்து தப்பி ஓடினர். அப்போது தினேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் கீழே விழுந்ததில் அவர்களது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவில் நகரமான கும்பகோணத்தில் நடந்துள்ள இந்த தகவல் கும்பகோணம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேரையும் நேற்று தாக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு கருதி அந்த பெண்ணை போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று சங்க தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் அன்பு முருகன், பொருளாளர் கவிதா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் வந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக் கணிப்பில் ஈடுபட்டனர்.

Next Story