2 பேர் பலியான சம்பவத்தில் திருப்பம்: ‘பார்’ உரிமையாளரை போலீசில் சிக்க வைக்க மதுவில் ரசாயனம் கலந்தது அம்பலம் - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 6 பேர் கைது; திடுக்கிடும் தகவல்கள்


2 பேர் பலியான சம்பவத்தில் திருப்பம்: ‘பார்’ உரிமையாளரை போலீசில் சிக்க வைக்க மதுவில் ரசாயனம் கலந்தது அம்பலம் - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 6 பேர் கைது; திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 7:10 PM GMT)

கொடைரோடு அருகே, மதுபானம் குடித்து 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘பார்’ உரிமையாளரை போலீசில் சிக்கவைக்க மதுவில் ரசாயனம் கலந்தது அம்பலமானது. இதுதொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டியில் கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கடையில் நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கே சிலர் மது வாங்கி குடித்துள்ளனர். இதில், கூலித்தொழிலாளர்களான கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 45), பாரதிபுரத்தை சேர்ந்த சமையன் என்ற சாய்ராம் (60), பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி (47) ஆகியோரும் மது வாங்கி குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சமையனும் இறந்தார்.

தங்கப்பாண்டியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபானம் குடித்து 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளப் பட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். அவர்கள், மது விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடையில் முதலில் சோதனை செய்தனர்.

விசாரணையில், பள்ளப்பட்டி சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில், அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (35) என்பவர் ‘பார்’ நடத்தி வருகிறார். இவர் ஆவாரம்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவர் மூலம் பெட்டிக்கடை வைத்து மது விற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்த முருகன், சமையன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி, மதுரையில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். இதேபோல், சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்தும் சில மதுபாட்டில்களை எடுத்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பெட்டிக்கடையில் மது விற்ற செல்வம் மற்றும் ‘பார்’ உரிமையாளர் ஜெயச்சந்திரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடையில் மது வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்தனர். இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஒருவர் வந்து 5 மதுபாட்டில்களை வாங்கிச்சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து மதுபானம் வேண்டாம் என்று கூறி, அந்த 5 பாட்டில்களையும் கொடுத்துவிட்டு, வேறு மதுபான வகையை வாங்கிச்சென்றுள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது அவர், சாண்டளாபுரத்தை சேர்ந்த செந்தில் (30) என்பது தெரியவந்தது. மேலும் ராஜலிங்கம் (37) என்பவர் மது வாங்கி வரச்சொன்னதால் வாங்கி கொடுத்தேன், என்றார். இதையடுத்து போலீசார் ராஜலிங்கத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன் (55) என்பவர் இதற்கு முன்பு சாராய வியாபாரியாக இருந்துள்ளார். அப்போது, ஜெயச்சந்திரன் திருப்பூர் மாவட்டத்தில் கூலி வேலை செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழ்வாணன், பள்ளப்பட்டியில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். அந்த கடையில் ஜெயச்சந்திரனை வேலைக்கு வைத்து, அவர் மூலம் தமிழ்வாணன் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார்.

அவரிடம் இருந்து தொழிலை கற்றுக்கொண்ட ஜெயச்சந்திரன், தன்னுடைய உறவினர்கள் மூலம் தமிழ்வாணன் நடத்தும் கடையை காலி செய்ய வைத்துள்ளார். இதையடுத்து ஜெயச்சந்திரன், கொடைரோடு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ராஜலிங்கத்திடம் இருந்து மது வாங்கி, பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை ராஜலிங்கத்துக்கும் கொடுத்துள்ளார்.

இதனால் தமிழ்வாணன், ஜெயச்சந்திரன் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிப்காட் அருகே புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்து, ஜெயச்சந்திரன் மதுபானங்களை வாங்கி விற்பனை செய்துள்ளார். எனவே ராஜலிங்கத்துக்கு அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜலிங்கம், தன்னுடைய சகோதரர் கருணாநிதியை தொழிலில் பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று ஜெயச்சந்திரனிடம் கூறியுள்ளார். அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே ராஜலிங்கத்துக்கும், ஜெயச்சந்திரனுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் சிப்காட் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில், மதுபான ‘பார்’ நடத்த ஜெயச்சந்திரன் உரிமம் வாங்கியுள்ளார். டாஸ்மாக் அருகே ‘பார்’ அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது. ஜெயச்சந்திரன் பள்ளப்பட்டியில் உள்ள பெட்டிக்கடையில் செல்வம் என்பவரை வேலைக்கு வைத்து, அங்கு மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால் ராஜலிங்கமும், தமிழ்வாணனும் சேர்ந்து ஜெயச்சந்திரனை பழிவாங்க நினைத்துள்ளனர். அப்போது, ஜெயச்சந்திரன் விற்பனை செய்யும் மதுவில் ஏதேனும் ரசாயனத்தை கலந்துவிட்டால், அதனை குடிப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். இதனால் அவர் போலீசில் சிக்கிக்கொள்வார். மேலும் அவர் விற்பனை செய்யும் மதுபானத்தை யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் அவருக்கு தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக தமிழ்வாணன், தன்னுடைய உறவினரும் நாட்டு வைத்தியருமான கிருஷ்ணமூர்த்தி (52) என்பவர் உதவியை நாடியுள்ளார். அவர், மதுரை பச்சரிசிக்காரத்தெரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் பாலு (45) என்பவரிடம் இருந்து, நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனப்பொடியை வாங்கியுள்ளார்.

இதையடுத்து தமிழ்வாணன், கவுண்டன்பட்டியை சேர்ந்த குடிநீர் ஆபரேட்டரான கிருஷ்ணமூர்த்தி (35) என்பவரிடம் கடந்த திங்கட்கிழமை பணம் கொடுத்து, செல்வத்திடம் இருந்து 5 மதுபாட்டில்களை வாங்கி வரச்சொல்லியுள்ளார். அவர் மது வாங்கி கொடுத்த பின்னர், ராஜலிங்கம், தமிழ்வாணன், நாட்டு வைத்தியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்ந்து அந்த பாட்டில்களில் ரசாயனப்பொடியை கலந்துள்ளனர்.

ராஜலிங்கம் டாஸ்மாக் கடையில் வேலை பார்ப்பதால், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பாட்டில்களை மூடியுள்ளார். இதையடுத்து அவர் கடந்த செவ்வாய்க்கிழமை, செந்திலிடம் பணம் கொடுத்து, செல்வத்தின் கடையில் இருந்து 5 மதுபாட்டில்களை வாங்கி வரச்சொல்லியுள்ளார். அவர் வாங்கிக்கொடுத்ததும், ரசாயனம் கலந்த மது பாட்டில்களை செந்திலிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் இந்த பாட்டில்களை செல்வத்திடமே கொடுத்துவிட்டு, வேறு வகை மதுபானத்தை வாங்கி வரச்சொல்லியுள்ளார். அவரும் அதன்படி செய்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில், அந்த கடையில் தங்கப்பாண்டி, முருகன், சமையன் ஆகியோர் மது வாங்கியுள்ளனர். இதில் ஒரு பாட்டிலை முருகனும், தங்கப்பாண்டியும், மற்றொரு பாட்டிலை சமையனும் குடித்துள்ளனர். இதில் முருகன், சமையன் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம், தமிழ்வாணன், கிருஷ்ணமூர்த்தி, மற்றொரு கிருஷ்ணமூர்த்தி, செந்தில், பாலு ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், ராஜலிங்கம் பதுக்கி வைத்திருந்த 12 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், சட்டவிரோதமாக மது விற்றதாக ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரையும் போலீசார் கைது செய் தனர்.

Next Story