20 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் அவதி: வாய்மேடு துணை மின்நிலைய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


20 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் அவதி: வாய்மேடு துணை மின்நிலைய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-07T00:46:53+05:30)

வாய்மேடு பகுதியில் 20 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் துணை மின்நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டில் கஜா புயலால் குடிசை வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக பல்வேறு கிராமங் களும் இருளில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வாய்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தென்னடார், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், வாய்மேடு மற்றும் துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் புயலால் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பெருமளவில் பழுதடைந்தன. இந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மின்வினியோகமும் கிடைத்தது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மெயின்ரோடு மற்றும் கடைத்தெருவிற்கு மட்டும் மின்வினியோகம் கொடுத்துள்ளனர். ஆனால் மேற்கண்ட கிராமங்களில் உள்பகுதிகளுக்குள் கடந்த 20 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆத்திர மடைந்த பொதுமக்கள் வாய்மேடு துணை மின்நிலைய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story