கடந்த ஆண்டு கிலோ ரூ.10; தற்போது ரூ.4-க்கு விற்பனை: பரங்கிக்காய் விளைச்சல் அமோகம்; விலை வீழ்ச்சி


கடந்த ஆண்டு கிலோ ரூ.10; தற்போது ரூ.4-க்கு விற்பனை: பரங்கிக்காய் விளைச்சல் அமோகம்; விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 7:42 PM GMT)

தஞ்சை பகுதிகளில் பரங்கிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட பரங்கிக்காய் தற்போது ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் யாரும் வாங்குவதற்கும் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரங்கிக்காய், பூசணிக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பூசணிக்காய் என்பது வெள்ளைபூசணி ஆகும். இந்த வகை பூசணிக்காய் சமையல், திருஷ்டி கழிக்க பூஜை, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது உண்டு.

பரங்கிக்காய் என்பது சமையலில் மட்டும் பயன்படுத்துவது. இந்த பரங்கிக்காய் சிறியதாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் பின்னர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதன் உள்ளே மஞ்சள் நிறத்திலும், விதைகள் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இந்த வகை பரங்கிக்காய் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த பரங்கிக்காய் 3 மாதத்தில் சாகுபடி செய்யப்படும். விதைகள் போடப்பட்டு 40 நாட்களில் செடிகள் வளர்ந்து காய்க்க தொடங்கி விடும். 3 மாதத்தில் அறுவடை செய்யப்படும். 2 கிலோ எடை முதல் 15 கிலோ எடை வரையிலான பரங்கிக்காய் இந்த பகுதிகளில் காய்த்து வருகின்றன. தற்போது சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் பரங்கிக்காய் அறுவடைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக இந்த பகுதிகளில் விளையும் பரங்கிக்காய்களை கொள்முதல் செய்வதற்காக சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வந்து விவசாயிகள் கொள்முதல் செய்து செல்வார்கள். ஆனால் தற்போது வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வருவதில்லை. இதற்கு காரணம் தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைவாக இருப்பது தான்.

தற்போது 1 கிலோ பரங்கிக்காய் ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பரங்கிக்காய்களை அறுவடை செய்த பின்னர் விவசாயிகளே, சரக்கு ஆட்டோ, மினி லாரி போன்றவைகளில் ஏற்றி விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கிறார்கள்.

இது குறித்து பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், “பரங்கிக்காய் விளைச்சல் அதிகமாக இருந்தும் தற்போது விலை இல்லை. கடந்த ஆண்டு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.4-க்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் வயலில் இருந்து பரங்கிக்காய்களை அறுவடை செய்வதற்கு ஆட்கள் கூலி, அதனை சுமந்து எடுத்துச்செல்வது, சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்வது என அதிக செலவு ஆகிறது. ஆனால் அதற்கு போதுமான விலை கிடைப்பது இல்லை. கடந்த ஆண்டைப்போல விலைக்கு விற்றால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது அவ்வாறு கிடைப்பதில்லை. மழை, புயல் காரணமாக அறுவடை செய்வதற்கு தாமதம் ஆனது”என்றனர்.

Next Story