அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 வாலிபர்களிடம் ரூ.6 லட்சம் மோசடி டியூசன் சென்டர் உரிமையாளர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 வாலிபர்களிடம் ரூ.6 லட்சம் மோசடி டியூசன் சென்டர் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 8:04 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தில் 2 வாலிபர்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த டியூசன் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சூரமங்கலம்,

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி புஷ்பா(வயது 43). இவர் அதே பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இவரிடம், சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் தங்களுக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து புஷ்பா மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகரன்(43) மூலம் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து வந்தார். இவர் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். அரசு வேலைக்காக புஷ்பா அந்த 2 வாலிபர்களிடம் இருந்து தலா ரூ.3 லட்சம் வாங்கி பிரபாகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அவரிடம் கொடுத்த பணத்தை புஷ்பா திரும்ப கேட்டார். இதற்கு அவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். தொடர்ந்து பணம் கேட்டதால் புஷ்பாவை அவர் தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புஷ்பா இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக டியூசன் சென்டர் உரிமையாளர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

Next Story