பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 8:39 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையில் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன. அதன்படி நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(த.மு.மு.க.) சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. தென்சென்னை மாவட்ட தலைவர் கோரிமுகமது தலைமை தாங்கினார். மத்தியசென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம், வடசென்னை மாவட்ட தலைவர் முகமது அலி ஆகியோர் முன்னிலைவகித்தனர். தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநில துணை பொதுச்செயலாளர் ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கருப்பு சட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் தர்வேஸ் ரஷாதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் யூனுஸ் பாஷா தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட செயலாளர் முகமது யூசுப் முன்னிலை வகித்தார். தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாவட்ட தலைவர் முகமது ஹூசைன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட செயலாளர்கள் செய்யது அலி அசாருதீன், முகமது சலீம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ரெயில் மறியலுக்கு முயற்சி

ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் காஜாமைதின் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்டிரல் ரெயில் நிலையம் சென்று ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்த இருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டதால், சென்னையை அடுத்த பரங்கிமலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பாபர் மசூதியை இடித்தவர்களை கைது செய்யவும், அந்த நிலத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் கோஷம் போட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேசும்போது, “இந்தியாவில் 95 சதவீத மக்கள் மதசார்பின்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரங்களில் பா.ஜனதா அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்கின்றனர். வரும் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பிரிவினையை ஏற்படுத்துபவர்களுக்கு பாடம் புகட்டுவோம்” என்றார்.

Next Story