தொடரும் விபத்துகளால் பயணிகள் அவதி: திம்பம் மலைப்பாதையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு - கனரக வாகனங்கள் செல்ல தடை
திம்பம் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பயணிகள் அவதியடைந்து வருவதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்,
தாளவாடி அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த திம்பம் மலைப்பாதை வழியாக 16 டன் எடையுள்ள வாகனங்கள் செல்ல மட்டுமே செல்ல அனுமதி உள்ளது.
ஆனால் 40 டன் முதல் 50 டன் வரை எடையுள்ள கனரக வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து சென்று பழுதாகி நிற்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். திம்பம் மலைப்பாதையில் உள்ள 1-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 27-வது கொண்டை ஊசி வளைவு வரை ஆய்வுப் பணி நடைபெற்றது. இதுபற்றி கலெக்டர் கதிரவன் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மற்றும் அதிகஅளவில் பாரம் ஏற்றி வரும் லாரிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மேலும் 9 மற்றும் 26-வது கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் குறுகி காணப்படுகிறது. இதனால் அந்த வளைவுகளை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும். விபத்துகளை தடுக்க லாரிகளில் ஏற்றப்படும் பாரத்தில் உயரம், அகலம் மற்றும் எடை குறித்து ஆய்வு செய்த பிறகே திம்பம் மலைப்பாதைக்குள் லாரிகள் அனுமதிக்கப்படும்.
அதனால் விரைவில் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் எடை மேடை, இரும்பு தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இந்த ஆய்வுப்பணியில் கலெக்டருடன் வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இருந்தனர்.
Related Tags :
Next Story