மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த: சத்தி அதிரடிப்படை போலீஸ் ஏட்டு சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த: சத்தி அதிரடிப்படை போலீஸ் ஏட்டு சாவு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 9:47 PM GMT)

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீஸ் ஏட்டாக (தலைமை காவலர்) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி யமுனா (28). யமுனா கோபியில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு நித்து (10), பிரணிகா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் பணிமுடிந்ததும் வீட்டுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் நெகமம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென மோட்டார்சைக்கிளின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறிய ஆறுமுகம் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த ஆறுமுகத்தின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story