பேரையூர் அருகே வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் பலி


பேரையூர் அருகே வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-07T03:35:55+05:30)

பேரையூர் அருகே வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் இறந்துபோனது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர், 

பேரையூர் அருகே உள்ளது தெய்வநாயகபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் நல்லாரு, ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துவிட்டு வழக்கம்போல் திரும்பவும் கொட்டகையில் அடைத்துள்ளார். மேலும் அருகில் உள்ள குடிசையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் நல்லாரு எழுந்து பார்த்தபோது கொட்டகையில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நாய்களை விரட்டிவிட்டு பார்க்கும்போது, அங்கு 11 ஆடுகள் இறந்துகிடந்தன.

தெய்வநாயகபுரம், கூவலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் ஆடு, மாடுகளை மட்டுமின்றி பொதுமக்களையும் விரட்டி கடித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்துள்ளன. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளன.

ஏற்கனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது வெறிநாய் கடிக்கு ஆடு, மாடுகள் பலியாகி வருகின்றன. இதேபோன்று டி.கல்லுப் பட்டி, பேரையூர் பகுதிகளிலும் நாய்கள் தொல்லை உள்ளது. அவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டும் சம்பவம் தினசரி நடந்து வருகிறது. எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதவிர பேரையூரில் செயல்படாமல் உள்ள நாய்கள் குடும்ப கட்டுப்பாடு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Next Story