கடலூர் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தில் ரூ.13¼ லட்சம் கையாடல்: முன்னாள் செயலாளர் கைது


கடலூர் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தில் ரூ.13¼ லட்சம் கையாடல்: முன்னாள் செயலாளர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 3:30 AM IST (Updated: 7 Dec 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தில் ரூ.13¼ லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்தவர் சந்தோஷ்குமார்(வயது47). இவரது சொந்த ஊர் புவனகிரி அருகே உள்ள மஞ்சக்குழி. இவர், அந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்திய தொகையை சங்கத்தின் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக தெரிகிறது.

அந்த வகையில் கடந்த 29-3-2012 முதல் 13-3-2018 வரையுள்ள காலக்கட்டத்தில் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்துக்கு சேர வேண்டிய 13 லட்சத்து 37 ஆயிரத்து 294 ரூபாயை கையாடல் செய்திருப்பது தணிக்கையில் தெரியவந்தது.

எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் கூட்டுறவு சங்கங்களின்(வீட்டுவசதி) துணைப்பதிவாளர் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் சந்தோஷ்குமார் மீது வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சந்தோஷ்குமாரை வணிக குற்றபுலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் 1-ம் எண் மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) கணேஷ் முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள். தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி சந்தோஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story