விழுப்புரத்தில்: சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது


விழுப்புரத்தில்: சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 5:00 PM GMT)

விழுப்புரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் காந்தி சிலை அருகில் நேற்று நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், நான் ரவுடி என்றும் என்னையே விசாரிக்கிறீர்களா? என்று கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணியை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்ட முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் நகர்ந்து விட்டார்.

பின்னர் அந்த வாலிபரை சக போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்த மணி மகன் பகவதி என்கிற சுரேந்தர் (வயது 30) என்பதும், இவர் அப்பகுதியில் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பகவதி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பகவதியை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story