திருவண்ணாமலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி ஒரு மணி நேரம் போராடிய திருடன்
திருவண்ணாமலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திருடன் ஒரு மணி நேரம் போராடியுள்ளான்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் 3 ஏ.டி.எம். எந்திரமும், ஒரு பணம் டெபாசிட் செய்யும் எந்திரமும் உள்ளது. நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இதனையடுத்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது, அதில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படும் காட்சி பதிவாகி உள்ளது. அதில், நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் லுங்கி கட்டிய வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து ஜெனரேட்டரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும், காலை 4.30 மணி வரை போராடியும் எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த வாலிபர் கோபத்தில் கம்பியை தூக்கி வீசிவிட்டு செல்வதும் தெரியவந்தது.
இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள 3 ஏ.டி.எம். எந்திரங்களிலும் சேர்த்து ரூ.50 லட்சம் இருந்து உள்ளது. எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது.
இந்த காட்சி பதிவை வைத்து அந்த திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story