விழுப்புரத்தில்; மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று மாலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் பலராமன் தலைமை தாங்கினார். கணக்காயர் களத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி வேல்முருகன், மாவட்ட தலைவர் சண்முகம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, தலைவர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், மின்சார சட்ட மசோதாவை அமல்படுத்தினால் மின் கட்டணம் உயர்வதோடு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், மின்வாரியத்தின் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதோடு தற்போது சேவையாக நடைபெற்று வரும் மின்வாரியம் வணிக மையமாக மாறிவிடும், போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும், அதனால் இந்த மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற ஜனவரி 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணைத்தலைவர் சிவக்குமார், ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மின்வாரிய பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story