லஞ்ச வழக்கில் கைதான நாங்குநேரி தாசில்தார் வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேலும் ரூ.14 ஆயிரம் பறிமுதல்
மினிபஸ் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கி கைதான நாங்குநேரி தாசில்தார் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து மேலும் ரூ.14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாங்குநேரி,
மினிபஸ் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கி கைதான நாங்குநேரி தாசில்தார் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து மேலும் ரூ.14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாசில்தார் கைது
நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 50), மினிபஸ் உரிமையாளரான இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக அவர் நாங்குநேரி தாசில்தார் வர்க்கீசை அணுகினார். அப்போது அவர், சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பால்துரை புகார் செய்தார். அவர்களின் அறவுரையின்படி நேற்று முன்தினம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு சென்ற பால்துரை ரூ.25 ஆயிரம் லஞ்ச பணத்தை தாசில்தார் வர்க்கீசிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வர்க்கீசை கையும், களவுமாக பிடித்து கைது செய்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் திடீர் சோதனை
மேலும், தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தார்கள். பின்னர் வர்க்கீசிடம் சோதனை செய்தபோது, அவரது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த மேலும் ரூ.14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இதையடுத்து வர்க்கீசின் சொந்த ஊரான நாகர்கோவில் கிறிஸ்து நகர் ராஜா தெருவில் உள்ள அவருடைய வாடகை வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்ததால் சோதனை நடத்த சென்ற அவர்கள் திரும்பி வந்து விட்டனர். பின்னர் நாங்குநேரியில் உள்ள அவருடைய வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆனால், இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கைதான வர்க்கீஸ் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story