புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி; அதிகாரிகள் ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேதாரண்யம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் புஷ்பவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக புஷ்பவனம் கிராமத்தில் புயலால் சேதமடைந்துள்ள தென்னை, மா, முந்திரி மற்றும் தோட்டக்கலை பயிர்களை விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் ரேவதி உள்ளிட்ட தன்னார்வலர்கள், கிராமமக்கள் மற்றும் மீனவ மக்கள் ஆகியோரை சந்தித்தனர். தொடர்ந்து அவர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க ஊக்கப்படுத்தினர். விவசாய நிலங்களில் புயலால் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்திட தமிழக அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும். எனவே, கணக்கெடுப்பு முடிவுற்ற இடங்களில் விவசாய மக்கள் மரங்களை அப்புறப்படுத்தி, மறு சாகுபடி செய்வதற்கு தயாராக வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் மறுவாழ்வுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளித்திட முன்வர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க செய்யும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து புஷ்பவனம் கடற்கரை பகுதியில் புயலின் போது ஏற்பட்ட அலை சீற்றம் காரணமாக கரைக்கு தள்ளப்பட்டுள்ள சேற்றினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் வேளாண் பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பாளர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, ஊக்கப்படுத்தினர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்கவும், தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் தியாராஜன், வேளாண் பொறியில் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.