கொள்ளிடம் அருகே வடகாலில் புதிய பாலம் கட்டவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம்; பொதுமக்கள் எச்சரிக்கை
கொள்ளிடம் அருகே வடகாலில் புதிய பாலம் கட்டவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே வடகால் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்திற்கு செல்லவும், வயல்களுக்கு செல்லவும் பொறைவாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பிளேட்டால் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இருபுறமும் கைப்பிடி இன்றி அகலம் குறைவாக உள்ளது. இதனால் பாலத்தின் வழியாக அப்பகுதி மக்கள் சென்றுவர அவதிப்படுகின்றனர். மேலும், இந்த பாலத்தின் வழியாக தான், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டும். மழை காலத்தில் வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது நடைபாலமும் நீரில் மூழ்கி விடுவதால் பிணத்தை சுமந்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் நடுப்பகுதி திடீரென உடைந்து விழுந்து சேதமடைந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களே உடைந்த நடைபாலத்தில் தற்காலிகமாக மரக்கட்டைகளை வைத்து சரி செய்தனர். ஆனால், பாலம் வலுவிழந்து இருப்பதால் எந்தநேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பாலம் முழுவதும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பு உடனே புதிய கான்கிரீட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.