கல்லூரி பேராசிரியை வீட்டில் ரூ.1½ லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கல்லூரி பேராசிரியை வீட்டில் ரூ.1½ லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 7:28 PM GMT)

நெல்லையில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லையில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பின்பக்க கதவு உடைப்பு

நெல்லையை அடுத்த பேட்டை காந்திநகர் ஐ.ஓ.பி. காலனி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 48). இவர் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி உமாதேவி (42).

இவர் பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் வெளியூரில் தங்கி படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் உமாதேவி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்றதும், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

நகை கொள்ளை

அதில் இருந்த தங்கச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட மொத்தம் 8 பவுன் நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்கு, 5 கைக்கெடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. எனவே, பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும்.

இதுகுறித்து பேட்டை குற்றப்பிரிவு போலீசில் உமாதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story