ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்கள் சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பாட்டாளி சுமை தூக்குவோர் சங்க கவுரவ தலைவர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார்.
தமிழக பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், சுமைதூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார், சுமைப்பணி சம்மேளன முன்னாள் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைசெய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சங்கங்களை உடனடியாக அழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தங்கவேல், மகாத்மா காந்தி சங்க தலைவர் பெரியசாமி, தொழிற்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ரங்கநாதன், தர்மலிங்கம், இளையராஜா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.