நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்


நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:15 PM GMT (Updated: 7 Dec 2018 8:06 PM GMT)

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பினால் மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரது நியமனம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை தொடர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது கட்டாயம். ஆனால் நீதிக்கும் மக்களாட்சி தத்துவத்திற்கும் தலைகுனிவுதான். இந்த வழக்கில் ஜனநாயகம் தோற்றுவிட்டது. இந்த தீர்ப்பு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை, அதாவது ஜனநாயகத்தின்படி அமையப்பெற்ற இந்தியா, தனது குடிமக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார, அரசியல் சமநீதி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சகோதரத்துவம், அடிப்படை தத்துவத்திற்கு எதிராக புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று கிழித்து எறிந்துவிட்டது.

மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம் அளித்துவிட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது மத்திய அரசு ஆண்டான் அடிமை மனப்பான்மையை வெளிப்படுத்தியது. சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவு, சண்டிகர், டாமன், டையூ போன்ற பகுதிகளில் மத்திய அரசு எவ்வாறு எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தி ஆளுகிறதோ அதேபோல்தான் புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் இது பொம்மை அரசுதான் என்று கூறியது. புதுச்சேரி மக்களின் சுதந்திரதன்மைக்கு பெரும் சாவு மணி அடிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவில் 7 கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் அளித்துள்ளார்கள். அதில் யூனியன் பிரதேச சட்டம் 3(3)ல் கூறியுள்ளபடி மத்திய அரசு என்றால் யார்? என்பதற்கு ஜனாதிபதிதான் என்றும், அவர் தனது அதிகாரத்தை மத்திய மந்திரிகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டதால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமே எம்.எல்.ஏ.க்களை நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

ஜனாதிபதி கவர்னரை புதுச்சேரி நிர்வாகியாக நியமித்த பிறகு எப்படி உள்துறை அமைச்சகம் இந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம்? கவர்னர் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சரவையை கலந்துதான் செயல்பட முடியும் என்ற விதி நியமன எம்.எல்.ஏ.க்கள் வி‌ஷயத்தில் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்கள்.

கூட்டாட்சி தத்துவம் இதில் மீறப்படவில்லை எனவும், மீறப்பட்ட பெரும் உண்மையை சோற்றில் மறைத்து வைத்து நியாயப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இணையாக அனைத்து ஓட்டு உரிமையும் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயக விதிகளை கேலி செய்வதாக உள்ளது.

தற்போது 3 நியமன உறுப்பினர்களும் பாரதீய ஜனதா என்று அறிவிக்கப்படும்பட்சத்தில் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாநிலத்தில் ஒரு கட்சி 4 சதவீத வாக்குகளை பெறவேண்டும் அல்லது 25 எம்.எல்.ஏ.வுக்கு குறைந்தபட்சம் ஒருவராவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் தோற்றுப் போகிறது. பல கோணங்களில் இந்த தீர்ப்பு ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களாக உள்ள சமநீதி, சமத்துவம் போன்ற பண்புகளை சிதைத்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த அரசியல் சுதந்திரத்தை பாழ்படுத்திவிட்டது.

இரண்டாம் தர குடிமக்களாக புதுச்சேரி மக்களை இந்த தீர்ப்பு அடையாளப்படுத்தி உள்ளது. கடந்த காலத்தில் புதுச்சேரியின் தனித்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்க மத்திய அரசு முயற்சி எடுத்தது. புதுச்சேரி மக்கள், அரசியல் கட்சிகள் வித்தியாசமின்றி பெரும் எதிர்ப்பினை காட்டி தனித்தன்மையை காப்பாற்றினார்கள். அதேபோல் இப்போதும் நமது தனித்தன்மையை பறிக்க மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் முயற்சித்து வெற்றி கண்டுள்ளது.

மேலும் புதுச்சேரியை மத்திய அரசின் முழு ஆளுமைக்குட்பட்ட பகுதியாக இணைப்பது என்ற முயற்சியை எடுத்திருக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள், வக்கீல்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை மீண்டும் பெற புதிய சுதந்திர போராட்டத்துக்கு தயாராக வேண்டும். நம்மை 2–ம் தர குடிகளாக மாற்றி உள்ள தீர்ப்பை செயலிழக்க செய்து நமது உரிமையை நிலைநாட்டிட உடனடியாக மாநில அந்தஸ்தை பெறுகின்ற தீவிர போராட்டத்தை கையில் எடுக்க மாநிலத்தின் நலம் விரும்பும் கட்சி அமைப்புகள் ஒன்றுசேர்ந்திட வேண்டும். இது ஒன்றுதான் நம் உரிமையை நிலைநாட்டிட ஒரே வழி. மக்கள் நல்வாழ்விற்கான வழி. இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலைதான் இருக்கும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story