மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண்ணால் பரபரப்பு


மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 3:15 AM IST (Updated: 8 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டை, 

நெல்லையில் மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுபோதையில் ரகளை

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பல்வேறு துறைகளில் பெண்களும் கால் பதித்து சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் தற்போது மதுக்கடைகளின் பெருக்கத்தாலும், சமூக மாற்றங்களாலும் ஆண்கள் மது குடிப்பதை கொண்டாட்டமாக்கி விட்டனர். அதேபோல் ஆண்களுக்கு போட்டியாக ஒருசில பெண்களும் தற்போது மது குடிக்க தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில், இளம்பெண் ஒருவர் மதுபோதையில் ரகளை செய்த வேதனையான சம்பவம் நெல்லை பேட்டையில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

டிப்-டாப் பெண்

நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் 25 வயது இளம்பெண் ஒருவர் ‘லெக்கின்ஸ்-டாப்ஸ்’ உடை அணிந்து டிப்-டாப்பாக நடந்து வந்தார். அவர் கையில் ஒரு சிறிய பேக்கை வைத்துக்கொண்டு தள்ளாடியபடி வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் நடக்க முடியவில்லை. அங்குள்ள ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்தபடி நின்றார்.

இதை கண்டு பரிதாபப்பட்ட 2 பெண்கள் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது அந்த இளம்பெண், என்னை பார்த்தால் நோயாளி மாதிரி தெரிகிறதா? ‘ஆப்’ பாட்டில் மது குடித்து இருக்கிறேன். உங்களுக்கும் வேண்டுமா? என்று கேட்டு பையில் இருந்த மதுபாட்டிலை எடுக்க முயன்றார். அதை பார்த்து அதிர்ந்து போன அந்த பெண்கள், நமக்கு எதுக்கு வீண்வம்பு என்று அங்கிருந்து சென்று விட்டனர்.

பஸ்சில் ஏற முடியவில்லை

பின்னர் அங்குமிங்கும் சென்ற அந்த பெண் ஒரு புரோட்டா கடைக்கு சென்று மிரட்டும் வகையில் புரோட்டா கேட்டார். கடைக்காரர்கள் நிலைமையை உணர்ந்து புரோட்டா பார்சல் கட்டி கொடுத்தனர். அதனை எடுத்துச்சென்று பஸ் நிலைய இருக்கையில் அமர்ந்து வேகமாக சாப்பிட்டார். பின்னர் கையை கழுவாமல் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் கேட்டார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவரை திட்டிவிட்டு, பணத்தை கொடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டார்.

அப்போது பள்ளி, கல்லூரி முடிந்து வந்த மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அந்த இளம்பெண்ணின் செய்கையை மிரட்சியுடன் பார்த்தனர். அவர்களிடமும் அவர் கலாட்டா செய்தார். அந்த பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தள்ளாடிய அந்த பெண், அந்த வழியாக வந்த தனியார் டவுன் பஸ்சில் ஏறினார். ஆனால் அவரால் போதையில் படிக்கட்டில் ஏற முடியவில்லை. இதை பார்த்த பெண் பயணிகள் அவரது கையை பிடித்து தூக்கி பஸ்சுக்குள் ஏற்றி விட்டனர். ஆனால் அவரால் எங்கே செல்ல வேண்டும் என்று கூற முடியாததால், கோடீசுவரன் நகர் பகுதியில் அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அதன்பிறகு அவர் அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார்.

கணவரை பிரிந்தவர்

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் பேட்டை பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழும் அவர் மதுப்பழக்கத்தால் இவ்வாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று காலை அந்த இளம்பெண் அதே பகுதியில் சாதாரணமாக நடந்து சென்றார். இதை பார்த்த அங்குள்ள கடைக்காரர்கள் வியந்தனர்.

மதுபோதையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story