நெல்லையில் கருத்தரங்கு: சமூக பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் தீர்வு காண வேண்டும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேச்சு
ஆராய்ச்சியாளர்கள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நெல்லையில் நடந்த கருத்தரங்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேசினார்.
பேட்டை,
ஆராய்ச்சியாளர்கள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நெல்லையில் நடந்த கருத்தரங்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேசினார்.
கருத்தரங்கு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தரமான ஆய்வுகளை வெளியிடுவது குறித்த கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்று பேசினார்.
இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கருந்தரங்கை தொடங்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பேராசிரியர் ஜெபமாலை வினன்சிராசி ஆகியோர் பேசினர்.
இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேசியதாவது:-
அர்ப்பணிப்பு முக்கியம்
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதற்கு முன்பாக ஒருசில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே முன்னேற்றம் அடைந்திருந்தன.
ஆராய்ச்சியாளர்கள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு ஈடுபாடு, அர்ப்பணிப்புதான் மிக முக்கியம். ஆய்வுக்கு உபகரணம் முக்கியம் அல்ல. குறைந்த அளவு உபகரணங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளலாம். ஆய்வாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி துறையை மட்டும் தெரிந்து வைத்திருக்காமல் அனைத்து துறைகளையும் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரின் ஆய்வும் சமூகத்தில் தாக்கத்தை உருவாக்க வேண்டும்.
தரமான ஆய்வு வேண்டும்
தற்போது அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளை ஒப்பிடுகையில் நமது ஆய்வுகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆய்வுகளை வெளியிடுவதை விட, தரமான ஆய்வுகளை மேற்கொள்வதே முக்கியம் ஆகும்.ஆய்வாளர்கள் தனது ஆய்வு முடிவு குறித்து வெளியே சொல்வது கிடையாது. தங்களது ஆய்வின் முழுவிவரம், அதன் பிரதிபலன் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். தற்போது சிலர் மதிப்பு, பணி உயர்வுக்காக மட்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அது தரமான ஆய்வாக இருக்காது. எனவே ஆய்வாளர்கள் புள்ளிவிவரங்களை மட்டும் சேகரிப்பது முக்கியமல்ல. ஆய்வு தரமானதாகவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story